புதுடெல்லி:
சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவோ அல்லது ஆன்லைனில் நடத்தவும் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களை கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்இ வாரியத்தை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் “ நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்களை வற்புறுத்தி அமரவைத்து தேர்வுகளை எழுத வைக்கும் சிபிஎஸ்இ வாரியத்தின் செயல் பொறுப்பற்றது. சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும், அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும்.

ஆனால் மாணவர்களை நேரடியாக தேர்வு அறைக்கு வரக்கூறி, கூட்டம் அதிகம் இருக்கும் தேர்வு மையத்தில் தேர்வுகளை எழுதக்கூற உத்தரவிடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ வாரியத்தின் அட்டவணைப்படி 10-ம் வகுப்புத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 7ம் தேதிவரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கி ஜூன 15ம் தேதிவரையிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.