சென்னை: ஆளுநர் அமைச்சரவையின் முடிவை எதிர்க்க முடியுமா? என்பது குறித்து பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை மற்றும் கைதிகள் விடுதலை விஷயத்தில், ஒரு மாநில அளுநர், அம்மாநில அமைச்சரவை எடுக்கும்  முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்றும் தெரிவித்து உள்ளது.  உச்சநீதி மன்றத்தில் இந்த அறிவிப்பு இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று மீண்டும்  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பாகவும், ஆளுநரிடம் கோப்புகள் தேங்கி நிற்பது தொடர்பாகவும், பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபகள் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன்  விவகாரத்தில் மிக விரைவாக ஆளுநர் முடிவை எடுக்க வேண்டும் என கடந்த முறை அறிவுறுத்தியது. அப்படி இருக்குபோது இதுவரை ஏன் ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கவில்லை என மத்தியஅரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய மத்தியஅரசு வழக்கறிஞர், ஆளுநர் இது தொடர்பான ஆவனங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும், அவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும்,  ஆளுநர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குடியரசுத் தலைவரால் மட்டுமே அறிவிக்க முடியும். அரசியல் சாசன விதி 72ன் கீழ் இந்த முடிவை செய்துளளது என்று கூறப்பட்டது.

இதற்கு தமிழகஅரசு தரப்பிலும், பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார். அவரது விடுதலை விவகாரத்தில்  யார் (ஆளுநரா – குடியரசு தலைவரா) முடிவெடுக்க வேண்டும் என்ற பிரச்சினையில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியதுடன்,  அவருக்கு ஏன் இவ்வளவு சிக்கல் ஏற்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது.  ஆளுநர்  மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. அதனால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு கொண்டு வரவேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். ஆளுநர், குடியரசுத் தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியதுன், இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, பேரறிவாளனை நாங்களே விடுவித்து இந்த வழக்கை முடித்து வைப்பதே  ஒரே தீர்வு என கருதுகிறோம் என தெரிவித்தனர்.

ராஜீவ்கொலை வழக்கு கைதிகள் குறித்து அரசியல் சாசன அமர்வு கூறியது என்ன?

கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை விவகாரம் மற்றும்  ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது குறித்து,  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது,  தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது.  ஆனால், ராஜீவ்காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று அப்போதைய மத்திய காங்கிரஸ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ராஜீவ்கொலை குற்றவாளிகள்  மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியதோடு  அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு விரும்பினால், அதன்படி முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

உடனடியாக அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அமைச்சரவையைக் கூட்டி , 7 தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார். அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி, தமிழக அரசு முடிவை எதிர்த்து ஒரே நாளில் உச்சநீதிமன்றம் போய் தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று கூறி தடை வாங்கியது.

பிறகு உச்சநீதிமன்ற அமர்வு இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசு புலனாய்வு செய்த வழக்கில் விடுதலை செய்யும் உரிமை மத்திய அரசுக்கே உண்டு என்று கூறியதோடு, குறிப்பாக இந்த 7 தமிழர் விடுதலை குறித்து வேறு ஒரு அமர்வு விசாரிக்கலாம் என்று கூறி விட்டது. இதற்காக நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டது. அது தனது தீர்ப்பில் மாநில அரசு இந்த 7 பேர் விடுதலையை மாநில அரசுக்குரிய 161ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்யத் தடையில்லை என்று அறிவித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை 7 தமிழர் விடுதலைக்கு பரிந்துரைத்து, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்று ஏற்கனவே பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் ஆளுநர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் மத்திய அரசின் உத்தரவுப்படி கோப்பைக் கிடப்பில் போட்டுவிட்டார். இந்த நிலையில் தற்போது 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் அதிரடி கருத்தை தெரிவித்து உள்ளது.

உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் மட்டுமே, மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.