சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து  மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இஐஏ2020 எனப்படும்  சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஷரத்துக்குள் மாநில உரிமையையும், சுற்றுச்சூழலையும் மீறும் வகையில் அமைந்துள்ளது. இதனால், மத்தியஅரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020க்கு விவசாயிகள் உள்பட சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்ப உள்ளது. இந்த வரைவு அறிக்கை சட்டமாக்கப்பட் டால், இந்தியா சுடுகாடாக மாறி விடும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, தமிழக மீனவர் நலச் சங்கம் அமைப்பின் சார்பில் கே.ஆர்.செல்வராஜ், இந்த புதிய சட்ட வரைவு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  மத்தியஅரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள து. இதை  பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடாமல், அது குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல. எனவே மத்தியஅரசு, அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7 வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்குத் தொடர்பாகப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வழக்கறிஞர், கர்நாடக உயர் நீதிமன்றம் தடையை நீக்க வாயப்பு இருப்பதால், வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள்,  கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை குறிப்பிட்டு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடையை நீக்கினால், நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகத் தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? இந்த அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை  ஆகஸ்டு 13-ம் தேதிக்குத் ஒத்தி வைத்தனர்.