சென்னை:

 சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்த டிரைவரை  ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் கால்டாக்சி டிரைவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ராஜேசை  தரக்குறைவாகத் திட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக, காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,  தமிழகத்தின் பல பகுதிகளில், வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் அருகே உள்ள சேத்துப்பட்டு  பகுதி கார், வேன் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பிலும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அப்போது, ராஜேஷ் மறைவுக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராஜேஷ் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரியும்  ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னையில், பல இடங்களிலும் ராஜேஷ் தற்கொலைக்கு நீதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரம்  இரும்புலியூரில் இருந்து வண்டலூர் வரை, ஜி.எஸ்.டி சாலையில் 100 மேற்பட்ட வாகனங்களை, ஓட்டுநர்கள் பேரணியாக ஓட்டிசென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் ராஜேஷ் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கன்னியா குமரி மாவட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுனரை தரக்குறைவாக திட்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

ராஜேஷின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி, ஈரோட்டில் ஏராளமான கால்டாக்சி ஓட்டுநர்கள், அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள், இன்று, வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.