டில்லி

சீ ஏ ஜி அளித்துள்ள அறிக்கையில் மாநிலங்கள் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 87000 கோடியை செலவழிக்கவே இல்லை என்பது தெரிந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மாநிலங்கள், கல்வி கற்கும் உரிமைக்கான சட்டத்தின் கிழ் மேலும் மேலும் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருவது தெரிந்ததே.   இந்நிலையில் சி ஏ ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை ஒதுக்கீடு செய்த தொகையில் ரூ.87000 கோடி இதுவரையில் மாநிலங்களால் செலவழிக்காமல் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டம் 2010ஆம் வருடம் இயற்றப்பட்டுள்ளது.  அதன்படி, ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிக்கப்பட வேண்டும்.  இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கல்வி கற்க வசதி இல்லாத சிறாருக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ரூ87000 கோடி உபயோகப்படுத்தாமல் உள்ளது என சி ஏ ஜி யின் அறிக்கை தெரிவிக்கின்றது.   உதாரணத்துக்கு கல்வியில் பின் தங்கி உள்ளதாக கூறப்படும் பீகார் மாநிலத்தில் மட்டும் ரூ.26500 கோடி இதுவரை உபயோகப்படுத்தப் படவில்லை.

பல மாநிலங்களில், உபயோகப்படுத்தப்படாத தொகை என அக்கவுண்டில் முடிக்கப்பட்டுள்ள (CLOSING BALANCE) தொகைக்கும், அடுத்த வருடம் ஆரம்பத்தில் காட்டப்படும் தொகைக்கும் (OPENING BALANCE) மிகுந்த வித்தியாசம் தென்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீஏஜி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையையும், செலவழித்த தொகையையும் கணக்க்கிட்டு இனிமேல் ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய தொகையையும், அதற்கான செலவினங்களையும் கணக்கிடுமாறு பரிந்துரை செய்துள்ளது.