இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் மறைமுகமான பிரிவினை தேசிய குடியுரிமை சட்டம் : சிவசேனா தாக்கு

Must read

மும்பை

தேசிய குடியுரிமை சட்ட மசோதா இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் உள்ள மறைமுகமான பிரிவினை என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய குடியுரிமைச் சட்ட மசோதா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் குடியேறியவர்களில் இஸ்லாமியரைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்க வழி செய்கிறது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் எனப் பல தலைவர்கள் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த சிவசேனா சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகியது.  தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது.   இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான சாம்னா தனது தலையங்கத்தில், “தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.  இந்நிலையில் மத்திய அரசு தேவையில்லாமல் தேசிய குடியுரிமைச் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.  இந்த மசோதா இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் உள்ள மறைமுகமான பிரிவினை  போல உள்ளது.

இந்துக்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு நாடு கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.  ஆனால் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் இந்துக்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிப்பதாகச் சட்டம் இயற்றினால் அது மதக் கலவரத்தை நாட்டில் தூண்டுவதாக அமையாதா?

இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திலும்  கடும் எதிர்ப்பு உள்ளது.  நாங்கள் இந்துக்களைக் கடுமையாகத் துன்புறுத்தும் அண்டை நாடுகள் மீது எதிர்ப்பு நடவடிக்க எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.

பிரதமரின் இந்த நடவடிக்கைகள் மூலம் அந்த மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பியாக வேண்டியது உள்ளது.  அவர்கள் அங்குச் செல்லவில்லை என்றால் இங்கே எப்படித் தங்க முடியும்?   இவர்கள் லட்சக்கணக்கில் இருந்தால் அவர்களை நாட்டில் எங்குத் தங்க வைக்கப் பிரதமர் எண்ணி உள்ளார்?

மகாராஷ்டிராவிலும் இது போலப் பலர் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ளனர்.  பாஜக ஆளும் கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ளவர்களை அம்மாநில அரசுகள் எவ்வாறு நடத்த உள்ளது என்பதைத் தெரிந்த பிறகு தான் நாங்கள் முடிவு எடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

More articles

Latest article