டெல்லி:

புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத் தில் குதித்துள்ளளனர்.

நேற்று மாலை டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் பேரணி நடத்தினர். இந்த பேரணி வன்முறையாக மாறியது. காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்திய காவல்துறையினர் பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து சுமார் நூற்றுக்கணக்காண மாணவர்களை கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து,  நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாமியா  பல்கலைக்கழக வன்முறையை கண்டித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாண வர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் வன்முறை ஏற்பட்டது. அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  இதை கண்டித்து, ஜதராபாத் மொளானா ஆசாத் உருது பல்கலைக்கழக மாணவர்க ளும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், டெல்லி தலைமை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் வசீம் அகமது கான் கூறும்போது, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. எங்கள் ஊழியர்களும், மாணவர்களும் தாக்கப்பட்டு வளாகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார் என்று கூறினார்.

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி சின்மயா பிஸ்வால் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், வன்முறைக் கும்பல் உள்ளே சென்று கற்களை வீசத் தொடங்கிய பின்னரே காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தனர்.

இந்த வன்முறை நடவடிக்கைகள் நடைபெற யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இதற்கிடையில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பிரதிபலித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவல்துறையினர் தாக்குதலை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.