சென்னை
சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவை 50% பயணிகளுடன் தொடங்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தமிழகத்தில் சுமார் ஒரு மாதமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேருந்து சேவைகள் மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. 11 மாவட்டங்களில் மட்டும் அதிக அளவில் பாதிப்புக்கள் உள்ளன.
எனவே நேற்று தமிழகத்தில் அந்த 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி இன்று காலை முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவை முழு அளவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் 100% பேருந்து சேவை தொடங்கப்பட்டாலும் பேருந்து இருக்கைகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்திருந்தது. ஆயினும் பயணிகள் எண்ணிக்கை இன்று மிகவும் குறைவாகவே இருந்தது. இன்னும் பெரிய கடைகள் மற்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் வசதிகள் தொடங்காததால் இந்த பயணிகள் குறைவு உள்ளதாக கூறப்படுகிறது.