சென்னை

ன்று ஆளுநர் உடையுடன் தொடங்கும் தமிழ்நாட்டின் 16 ஆம் சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளன.

சமீபத்தில் முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.  அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.  இன்று கலைவாணர் அரங்கில் தமிழக 16 ஆம் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

பொதுவாக புதிய அரசு பதவி ஏற்றதும் நடைபெறும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையில் புதிய அரசின் கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் இடம் பெறுவது வழக்கமாகும்.   இன்றைய ஆளுநர் உரையில் நிதி மேலாண்மை குறித்த முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.   மேலும் கொரோனாவால் அரசு ஊழியர்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் மற்றும் அதற்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் ஆகியவையும் இடம் பெற உள்ளன.  அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, மேகதாது அணை பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, 7 பேர் விடுதலை ஆகிய பிரச்சினைகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.