சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து, தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 5 முதல் 10 படுக்கைகள் வரை தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும். உயிரை பறிக்கக்கூடிய பட்டாசுகளையும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளையும் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள், ராக்கெட் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பெரும் அளவில் விபத்துகளை தவிர்க்க முடியும். அதிக அளவிலான ஒலி எழுப்பும் வெடிகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.