புலந்ஷர்:

இறைச்சிக்காக பசு மாட்டை கொன்ற சம்பவம் தொடர்பாக, 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 3-ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் ஷியானா அடுத்த மஹாவ் என்ற கிராமத்தில் பசு மாடு கொல்லப்பட்டு, அதன் பாகங்கள் வயல்வெளியில் வீசப்பட்டுக் கிடந்தன.

இதனையடுத்து நடந்த கலவரத்தில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் மற்றும் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷனும் சூறையாடப்பட்டது.

இது தொடர்பாக 2 வழக்குகளை போலீஸார் பதிவு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 80 பேரில் 27 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டும், பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டியவர்கள் மீதும் தனித்தனியே வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், பசு மாட்டை இறைச்சிக்காக கொன்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.