டில்லி

ல நிறுவனங்களில் இருந்து வர வேண்டிய ரூ.3000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க  பி எஸ் என் எல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.  கடந்த 2016-17 ஆம் வருடம் ரூ.4793 கோடி நஷ்டம் ஆகியிருந்த நிலையில் 2017-18 ஆம் வருடம் இந்த நஷ்டம் ரூ.7,083 கோடியை அடைந்தது.   சென்ற 2018-19 ஆம் வருடம் இந்த நஷ்டம் இரு மடங்காகி 14, 202 கோடியை எட்டி உள்ளது.  இந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில்75% நிறுவனத்தின் 1,05,170  ஊழியர்களின் ஊதியத்துக்குச் செலவிடப்படுகிறது.

இந்த நஷ்டத்தைக் குறைக்க செலவினங்களைக் கட்டுப்படுத்தி வரவை பெருக்க வேண்டிய நிலையில் பி எஸ் என் எல் உள்ளது.   சென்ற மாத இறுதியில் அளிக்க வேண்டிய ஊழியர்களின் ஊதியம் நிதிப் பற்றாக்குறையால் இந்த மாதம் 5 தேதிக்கு மேல் அளிக்கப்பட்டுள்ளது.    அத்துடன் இந்த நிறுவனத்துக்குப் பல நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய கட்டணத் தொகை நிலுவை ஆயிரக்கணக்கான கோடி அளவில்  உள்ளது.

பி எஸ் என் எல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான புர்வார், “பல  பெரிய நிறுவனங்களிலிருந்து பி எஸ் என் எல் க்கு வரவேண்டிய கட்டணத்தொகை ரூ.3000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது.   நாங்கள் இந்த தொகையை வசூலிக்கத் தினமும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.  அதில் நாங்கள் வெற்றியை கொனடு வருகிறோம்.   ஆயினும் இத்தனை நாட்களுக்குள் வசூலித்து விடுவோம் எனச் சரியாகச் சொல்ல முடியாத நிலையில் தற்போது இருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.