பெங்களூரு:

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தல் ஆட்சி அமைக்க  கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரி உள்ளார் எடியூரப்பா.  அதையடுத்து இன்று மாலை அவர் பதவி ஏற்கிறார். தொடர்ந்து ஜூலை 31ந்தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாஜகவுக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், அவர் எப்படி ஆட்சி அமைக்கப் போகிறார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமாரசாமி அரசுக்கு எதிராக  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தனர். இவர்கள் ராஜினாமா கடிதம் தொடர்பாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நேற்று 3 பேரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவளித்து  கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் மிதந்து வரும், ராஜினாமா கொடுத்துள்ள மற்ற எம்எல்ஏக்களும், தங்களது பதவிகளும் பறிபோய் விடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மீண்டும் தங்களது சொந்தக்  கட்சிகளுக்கே திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று  திடீரென ஆளுநரை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். அவரும் அவரை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். அதையடுத்து இன்று மாலை எடியூரப்பா மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஜூலை 31ந்தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

224 பேர் கர்நாடக சட்டமன்றத்தில், தற்போது 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 221 ஆக குறைந்து உள்ளது. இதில்,  பெரும்பான்மையை நிரூபிக்க 111 எம்எல்ஏக்கள் தேவை.

ஆனால், பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு மட்டுமே உள்ளது. இதன் காரணமாக பாஜகவுக்கு 106 வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும்போது, முதல்வராக பதவி ஏற்கும் எடியூரப்பாக, சட்டமன்றத்தில் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜகவின் செயல் என்பது, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்ததும்,  ஆட்சி அமைக்க உரிமைக்கோரி, சட்டமன்றத்துக்குள் நுழைந்த எடியூரப்பா, கடந்த ஆண்டு(2018) மே 19ந்தேதி அன்று சட்டமன்றத்தில்  பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், கண்ணீருடன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சபையில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் அப்படி நிகழ்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.