உஜ்ஜையனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில், ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  4 பேருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட மின்தடையால், ஜோடிகள் மாறி அமர்ந்து தாலிகட்ட தயாரான நிகழ்வு தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் மின்தடை அதிகமாக உள்ளது. மத்தியபிரதேச  மாநிலத்திலும் அவ்வப் போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த  நிலையில், அங்கு நடைபெற இருந்த திருமணத்தின்போது மின் தடை ஏற்பட்டதால், மணமக்கள் ஜோடி மாறிப்போயுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் ஒரு ஆணுக்கு திருமணம் நடைபெற இருந்தது.   நான்கு திருமணங்கள் ஒன்றாக நடைபெறவிருந்தது. அங்கு அடிக்கடி மின்வெட்டு நிகழ்ந்து வரும் நிலையில், திருமணத்தின்போது ஏற்பட்ட மின்தடையால்,  நான்கு மணமக்களில் இரண்டு மணமக்கள் ஆட்கள் மாறி தவறுதலாக மணமேடையில் அமர்ந்துள்ளனர்.

மணமகள்களான கோமல், நிக்கிதா, கரிஷ்மா என 3 பேருக்கு திருமணம் நடைபெற இருந்த சமயத்தில்,  நிகித்தா மற்றும் கரிஷ்மா ஆகிய இருவர் மின்தடை மற்றும் பாரம்பரிய உடை காரணமாக  ஜோடி மாறி அமர்ந்துள்ளனர்.

இதை அறியாத, திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் மற்றும் பெரியோர்களும், மாறிப்போன ஜோடியை வைத்து மந்திரம் மற்றும் சடங்குகள் செய்து வந்தனர். இந்த நிலையில்  மின்சாரம் வந்ததும், மணமக்களை பார்த்தபோது, ஜோடி மாறி அமர்ந்திருந்ததைப் பார்த்து குடும்பத்தினர் பதறியுள்ளனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் சரியான ஜோடியை அமர வைத்து சடங்குகளை மீண்டும் செய்ய வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த ருசிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 ஜோடிகளும்  ஒரே விதமாக உடை அணிந்திருந்ததாலும், மின்தடையால் ஏற்பட்ட இருட்டாலும்,  இந்த குழப்பம் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.