டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விடம் மக்களவை நெறிமுறைகள் குழு அக்.31-ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது. இதற்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு மற்றும் அதானி குறித்து அதிரடி கேள்விகளை எழுப்பி அதகளப்படுத்தியவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யான மஹுவா மொய்த்ரா. இளம் பெண் எம்.பி.யான இவர் நாடு முழுவதும் பிரபலமானார். ஆனால், இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராகவும்,  அதானி குழுமத்துக்கு எதிராகவும் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து  மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.  மேலும், இந்த தகவலை, வழக்கறிஞர்  ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தனக்குத் தெரியப் படுத்தியதாகவும், மஹுவா லஞ்சம் பெற்ற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.  இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மம்தா கட்சியும் விசாரணை நடத்தும் என கூறியிருக்கிறது. இந்த நிலையில்,  மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக  விசாரணை நடத்த பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  துபே மற்றும் வழக்கறிஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோா் நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தனா்.

இது தொடா்பாக நெறிமுறைக் குழு தலைவா் வினோத் குமாா் சோன்கா் செய்தியாளர்களை சந்தித்தபோது,  ‘இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக மஹுவா மொய்த்ரா குழு உறுப்பினா்கள் முன்பாக அக்டோபர் 31-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிப்பாா்.

இந்த விசாரணையில் மத்திய உள்துறை, தொழில்நுட்பத் துறை அமைச்சகங்களின் உதவியைக் கோர உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மொய்த்ரா மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழு, லோக்சபாவிற்கு தெரிவிப்பது மற்றும் பிற அனுமதிகள் போன்ற அனைத்து நடைமுறைகளும் எம்பியால் எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய மத்திய அமைச்சகத்தை அணுக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக நெறிமுறைகள் குழு  முன்  துபே அளித்த அறிக்கையில்,   மொத்ரா கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சென்றது மற்றும் அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும்,    லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால், இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் கண்ணியம் தொடர்பானது மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலி மற்றும் ஜேடி(யு) கிரிதாரி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில குழு உறுப்பினர்கள், அவர் முதல் முறை எம்.பி.யாக இருந்ததால், இந்த விஷயத்தில் மெத்தனமான பார்வையை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர், அதற்கு துபே ஒரு உதாரணம் காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாக பணியாற்றுவார் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.