மூளைவளர்ச்சி இல்லாதது காங்கிரஸ், அங்கிருந்தபோது பேசியது மனசாட்சி இல்லாமல் பேசியது! சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வீசிய குஷ்பு

Must read

சென்னை: காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாதது, தான் இதுவரை பேசியது மனசாட்சி இல்லாமல் பேசியது என காங்கிரஸ் கட்சிமீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியுள்ளர் நடிகை குஷ்பு.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாக இருந்து வந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, திடீரென நேற்று பாஜகவில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பெண்ணியக்கவாதியாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டுள்ள குஷ்புவின் பச்சோந்தித்தனம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய குஷ்பூவுக்கு தமிழக பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்த பிறகே, தான் நடிகை என காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்ததா என வினவியவர்,  காங்கிரசில் மரியாதை இல்லை என்றும், 6 ஆண்டுகளை அக்கட்சியில் தாம் வீணாக்கிவிட்டதாகவும் குஷ்பூ வருத்தப்பட்டதுடன், காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என கடுமையாக சாடினார்.
அதையடுத்து  தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த குஷ்பு. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
‘பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த நாட்டுக்கு நல்லது செய்கிறோம் என்று முன்பு இருந்த கட்சியில் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது இல்லை என்பது புரிந்தது. அதனால் நிதானமாக யோசித்து பா.ஜ.கவில் இணைந்து உள்ளேன்.  தாமரை ஒவ்வோர் இடத்திலும் மலர வேண்டும் என்ற ஆசையில் பாஜகவில் இணைந்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை என்றார்.  மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் சேர்ந்துள்ளேன். பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை.
பெண் ஒருவர் புத்திசாலியாக இருக்கக்கூடாது என நினைத்தனர். நடிகை என கூறியவர் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைவர்  வேடத்தில் நடிக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரையும் கடுமையாக விமர்சித்தார்.
அதை தைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, கடந்த காலத்தில் ’இலங்கை தமிழர்கள் தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டீர்கள் தற்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, தற்போதும்  நான் அதே நிலைப்பாட்டில் உள்ளேன் என்றார்.
பெரியார் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். அதை தான் நான் விரும்புகிறேன். ஆனால் அவர் எல்லா கருத்துக்களையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். பெரியார் கொள்கைபடி தேர்தல் பாதை செல்லக்கூடாது. அவர் அரசியல் வேண்டாம் என்று கூறியவர். ஆனால் தி.மு.க அரசியல் தான் பேசுகிறது என்று கூறியவர்,  தான் பதவிக்காக பா.ஜ.கவுக்கு வரவில்லை என்று விளக்கினார்.
தொடர்ந்து பேசியவர், ‘நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினர் ரூ.2 தந்து எனக்கு எதிராக ட்வீட் போடச் செய்யும் வேலையை தொடங்கிவிட்டனர். ரூ.2 வாங்கி என்னை பற்றிய வதந்தி டிவீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான். ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் 5-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் கொள்கை. எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்த்துதான் ஆக வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
எனது அரசியல் முடிவுகளுக்கு சுந்தர்.சி. காரணம் என்று கூறக்கூடாதுஎன்றவர், நான்,  பாஜகவில் சேருவதற்கு கணவர் சுந்தர்.சி. காரணமில்லை என்றும், இப்படி பேசுவதெல்லாம் கேவலமான புத்தி என  காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு குஷ்பு விளக்கம் அளித்தார்.
பிற கட்சியில் இருந்து விலகி வேறு யாரும் காங்கிரசில் சேரவில்லையா? திருநாவுக்கரசரே வேறு கட்சியில் இருந்து வந்தவர் தானே என்றவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது,  நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது என்று தெரிவித்தார்.
காங்கிரசில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பாஜகவை விமர்சித்தேன். வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் என்றும்,   பா.ஜ.க நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ்தான் என்று கூறியவர், இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டித்தான் வந்துள்ளேன் என்றார்.
தமிழக மீனவர்கள் குறித்த கேள்விக்கு, மோடியின் பாஜக ஆட்சியில் ஒரு தமிழக  மீனவராவது உயிரிழந்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பியவர்,  பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்து கூறியதால் தான் எனக்கு காங்கிரசில் பல பிரச்சனைகள் வந்தன. நல்லது செய்வதால்தான் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் என்றார்.
முதல்வரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், முதல்வர் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க இருப்பதாக கூறினார்.
ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆவாரா என்ற கேள்விக்கு, ஸ்டாலின் முதல்வர் ஆவதை மக்கள்தான் முடிவு செய்வர்,
ரஜினி தன் மீது காவி சாயம் பூச வேண்டாம் என்று கூறினாரே என்ற கேள்விக்கு நான் ஒன்றும் ரஜினியின் செய்தித்தொடர்பாளர் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 
 

More articles

Latest article