டெல்லி: சிறுவர்கள் நிகழ்ச்சி மூலம் பிரதமரை விமர்சனம் செய்தது தொடர்பாக ஜீ தமிழ் டி.வி-க்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 7 நாட்களில் விளக்கம் அளிக்க  தொலைத்தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில், குழந்தைகள் மட்டும் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஷோ  நடத்தப்பட்டது. இந்த நிகழ்சியை தயாரித்து வழங்கும் ஒருங்கிணைப்பாபளர், பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்து, அதை சிறுவர்கள் மூலம் ஒளிரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இரு சிறுவர்களில் ஒருவர் வடிவேலுவின் பிரபல இம்சை அரசன் போலவும், மற்றொருவன் அமைச்சர் போலவும் வேடமிட்டு மத்திய பாஜக ஆட்சியையும், பிரதமர் மோடியையும் கலாய்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதில்,  கருப்பு பணம், டிமானிடைசேஷன் குறித்தும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்தும் விமர்சிக்கப்பட்டது.

சிறுவர்களின் இந்த நிகழ்ச்சி சோஷியல் மீடியாவில் வைரலானது. இது மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியது. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு டிவிட் செய்து புகார் அளித்தார். அதையடுதது, மத்திய இணை அமைச்சர்  முருகன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், ஜீ தமிழ் சேனலுக்கு நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 15.01.2022 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிராக இந்த அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். புகாரின் சாரம் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் இந்த அமைச்சகத்திடம் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.