கடலூர்: 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா இன்று காலை நடைபெற்றது.  காலை 6 மணிக்கு திரைச்சீலை அகற்றி ஜோதி காண்பிக்கப்பட்டது.

இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் கடந்த 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து  வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூசத்தினத்தன்று ஆண்டுதோறும் ஜோதி தரிசனம் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் பெற்று வருகிறார்கள்.

ஆனால், இந்த ஆண்டுகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜோதி தரிசனம் விழாவுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி,  இன்று (18.01.2022)  செவ்வாய் கிழமை, சத்திய ஞானசபையில் காலை 6.00, 10.00 பிற்பகல் 01.00, இரவு 7.00 மற்றும் இரவு 10.00 மணியளவில் பக்தர்கள் பங்கேற்பின்றி ஜோதி தரிசன விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி தரிசனம் தொடங்கிய 151வது ஆண்டான இந்த ஆண்டு (2022) முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.