சென்னை: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால், பட்டமளிப்பு விழாவை தமிழகஅரசு புறக்கணிக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருப்பவர் தமிழக ஆளுநர். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும், வேந்தருக்கும் இடையே சமூக உறவு இல்லை. இதனால், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கிவிட்டு, மாநில முதல்வரே ஆளுநராக இருக்கும் வகையில் சட்டதிருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழகஅரசின் தீர்மானத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

இந்த நிலையில், மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலை புகுத்துகிறார் என்றும், “மத்தியஅரசால் நியமிக்கப்படுவதால்  ஆளுநர் மத்திய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை; மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா வரும் 13ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. ஆனால், இணைவேந்தரான என்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. உயர் கல்வித் துறை செயலாளரிடமோ இது குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கவுரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது? என கேள்வி எழுப்பியவர், ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ஆளுநராக இல்லாமல் பாஜகவிற்கு பிரசார செய்பவர்களில் ஒருவராக ஆளுநர் உள்ளதார்.

இவ்வாறு, பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபுகள், முறையாக கடைபிடிக்காத காரணத்தால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். இது போன்ற பிரச்னைகள் எழக் கூடாது என்றுதான், ஆளுநர், வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், இன்னும் கையொப்பம் இடவில்லை.

இதே போல ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆளுநர் திராவிடம் குறித்து பேசும்போது வரலாற்றை தெரிந்து கொண்டு பிறகு பேச வேண்டும். ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் ‘Humanism’ என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.