“மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவோ, சேலை இல்லத்தில் வைத்து பாதுகாக்கவோ சமூக நலத்துறை உதவாததால், அந்த சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி கோருகிறார்கள் ஏழை பெற்றோர்” என்று ஒரு தகவல் திருப்பூரில் இருந்து வர.. அதிர்ச்சியுடன் விசாரிக்க ஆரம்பித்தோம்.
திருப்பூர் சாமுண்டி புரம்  எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி.  மனைவி மகேஸ்வரி,  14 வயது மகள் கவிகா ராரஜேஸ்வரி, 13 வயது மகன் கருப்பையா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர்தான் தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டுபவர்.
“ஏன் இப்படி ஒரு விபரீத கோரிக்கை” என்று கேட்டோம்.
கண் கலங்க மெல்ல பேச ஆரம்பித்தார்:
“மூத்த மகள் பிறந்து ஒன்றரை வருடத்தில் மகன் பிறந்தான். ஆரோயக்கியமான குழந்தை. கருப்பையா என்று பெயர் வைத்து ஆசை ஆசையாய்  வளர்த்தோம்.
அவனுக்கு ஒரு வயது இருக்கும் போது விஷக் காய்ச்சல் வந்தது. பதறிப்போய் மருத்துவர்களிரடம் காண்பித்தோம். சில நாட்களில் காய்ச்சல் சரியாகிவிட்டது. ஆனால் வழக்கம்போல விளையாடவில்லை. அப்படியே படுத்திருந்தான். பசிக்குக் கூட அழுவதில்லை.

நிர்வாணமாக கருப்பையா
நிர்வாணமாக கருப்பையா

அன்றிலிருந்து இந்த 12 வருடங்கள் நாங்கள் பார்க்காத மருத்துவர்கள் இல்லை. போகாத மருத்துவமனைகள் இல்லை.
ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
எங்கள் மகனுக்கு இப்போது பதின்மூன்ற வயது ஆகிறது. ஆனால் பசித்தால் சொல்லத்தெரியாது.. நாங்களாக நேரம் பார்த்து ஊட்டி விட வேண்டும். உடைகள் அணியத் தெரியாது.
அப்படியே அணிந்துவிட்டாலும் திடீரென ஆவேசப்பட்டு தனது உடைகளை கிழித்தெறிந்துவிடுவான். பல சமயங்களில் தானே கழற்றி விடுவான். மலஜலம் வந்தாலும் சொல்லத்தெரியாது. அப்படியே வீட்டிற்குள் இருந்துவிடுவான். தண்ணீர் பாட்டிலைக் கண்டால் போதும்.. அப்படி ஒரு ஆவேசம் அவனுக்கு வந்துவிடும். பொருட்களை உடைப்பான். எங்களையும் அடிப்பான்.
ஆனாலும் என்றாவது சரியாகிவிடுவான் என்ற நம்பிக்கையில் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் முடியவில்லை..” .என்ற ராஜேந்திரன் அதற்கு மேல் பேச முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டார்.
மவுனமாக அழுதுகொண்டிருந்த அவரது மனைவி ராஜேஸ்வரி, மெல்ல பேச ஆரம்பித்தார்:
“என் கணவருக்கு கூலி வேலை. தினம் தினம் உழைத்தால்தான் இரண்டு வேளையாவது சாப்பிட முடியும். ஆனால் பல நாட்கள் வேலைக்குப் போகாமல் மகனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அலைவோம்.
இதுவரை 15 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டோம். கடன் தலைக்கு மேல் இருக்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு சக்தி இல்லை. மூத்த மகள் இருக்கிறாள். 9ம் வகுப்பு படிக்கிறாள். எங்கள் மகனது நடவடிக்கையால் அவளது படிப்புக்கும், மனநிலைக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவனது நடவடிக்கைகளால் பயந்துபோய் இருக்கிறாள்..” என்ற ராஜேஸ்வரி மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார்.
ராஜேந்திரன் -ராஜேஸ்வரி -கருப்பையா
ராஜேந்திரன் -ராஜேஸ்வரி -கருப்பையா

ராஜேந்திரன் நம்மிடம் பேச ஆரம்பித்தார்:
“எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சமூகசேகவர் நண்பர் தெய்வராஜை நாடினோம்.  அவர் எங்கள் மகனின் நிலையைப் பார்த்துவிட்டு, “ ங்கள் மகனை மனநலம் பாதித்த சிறுவர்களுக்கான இல்லத்தில் சேர்க்கலாம்” என்று ஆலோசனை சொன்னார்.
அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவரே பல சமூகசேவை இல்லங்களுக்கு அழைத்துச் சென்றார்.  ஆனால் யாரும் என் மகனை சேர்த்துக்கொள்ளவில்லை.
 
கருணைக்கொலைக்கு மனு
கருணைக்கொலைக்கு மனு

 
திருப்பூர் (சைல்டு வெல்பர்) குழந்தைகள் நலமையத்திற்கு அழைத்து சென்றோம் அங்கேயும் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  மாவட்ட குழந்தைகள் நலமையத்திலும், “தன்னைத்தானே பராமரித்துக்கொள்பவர்களைத்தான் சேவை இல்லத்தில் சேர்க்க முடியும். இந்த சிறுவன் திடீரென ஆவேசமாகிறான். ஆகவே எந்த மையத்திலும் சேர்க்க முடியாது” என்று எங்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள்” என்றவர், சற்று நிறுத்தி…
“இனி எங்களுக்கு வேறு வழியில்லை..  எங்கள் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்போகிறோம். அரசு அனுமதித்துவிட்டால் துயரத்துடன் எங்கள் மகனை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!” சொல்லி முடித்த ராஜேந்திரன், துக்கம் தாங்காமல் கதற ஆரம்பித்துவிட்டார். உடன் அவர் மனைவி ராஜேஸ்வரியும் அழ ஆரம்பித்துவிட்டார்.
இவர்கள் அழுகைக்கு பதில் சொல்லப்போவது யார்?

  • சோமு