இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு…

Must read

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக  இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் தற்போது  பழமைவாத கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் தலைவரான போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்தார். அவர் தனது கட்சி கொறடாவான கிரிஸ் பின்ஷர் மீதான பாலியல் குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சொந்த கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கினர். இதற்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரியதுடன், கிரிஸ் பின்ஷரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இருந்தாலும் அவர்மீது திருப்தி அடையாத அவரது கட்சி எம்.பி.க்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி வந்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், போரிஸ் ஜான்சன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்று கூறி, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே இரு எம்.பிக்கள் பதவி விலகியிருந்த நிலையில் மீண்டும் இரு எம்.பிக்கள் பதவி விலகியிருப்பது போரிஸ் ஜான்சன் கட்டாயமாக பதவி விலகும்  நிலையை உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சன் விரைவில் பதவி விலகுவார் எனவும் புதிய தலைவர் நியமனம் செய்யப்படும் வரை அவரே தற்காலிக பிரதமராக தொடர்வார் எனவும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்குக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விரைவில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் பிரதமர் பதவியை பிடிக்க முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் , வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் , முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் இவர்களிடையே கடும் போட்டி நிலவலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இன்போசிஸ் முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது 42 வயதாகும் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  கருவூலத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இது அவரது முதல் முழு அமைச்சரவை. ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், அது  இங்கிலாந்தின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என பெருமைக்கு சொந்தமானவராவார்.

 

More articles

Latest article