பிரிட்டன் பிரதமர்  போரிஸ் ஜான்சன் ஜனாதிபதி மக்ரோனுடனான சந்திப்பின் போது எலிசி அரண்மனையில்  தனது முன்பு உள்ள  மேஜையில் கால் வைத்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், போரிஸ் ஜான்சனின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வந்த நிலை யில், அப்போதைய பிரதமர் தெரசா மே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து,  பிரிட்டனின்  பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர் களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த  வியாழக்கிழமை அன்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்,  சந்திப்பின் போது எலிசி அரண்மனையில் ஒரு மேஜையில் கால் வைத்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

ஆனால், அது தொடர்பாக வெளியான வீடியோவில் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கேலியாக பேசியபோது, எதேச்சையான போரிஸ் ஜான்சன் மேஜையின் மீது காலை தூக்கி வைத்திருந்தாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்கள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்தும்,  ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து விவாதித்தனர். ஆனால்,  பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் அடிப்படை மறு பேச்சுவார்த்தைக்கான ஜான்சனின் கோரிக்கையை மக்ரோன் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்வின்போது, ஜான்சனின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதை பிரபல  வரலாற்றாசிரியர் சோனியா பர்னெல் சமூக ஊடகங்களில்  கடுமையாக விமர்சித்து உள்ளார். அதில், ஜான்சனின் செயல்  “முரட்டுத்தனமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது” என்று டிவீட் செய்துள்ளார்.

“பக்கிங்ஹாம் அரண்மனையில் மேக்ரோன் தனது கால்களை மேசையில் வைத்திருந்தால்….. கற்பனை செய்து பாருங்கள்.” என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

பிரிட்டன் பிரிதமர் போரிஸ் ஜான்சனின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.