கொழும்பு

டந்த 4 மாதங்களாக இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஈஸ்ட்ர் தினமான ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று 3 தேவாலயங்கள், 3 விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் காரணம் எனக் கூறப்படுகிறது. அதையொட்டி இலங்கையில் அவசர நிலைச் சட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த சட்டத்தை ஒவ்வொரு மாதம் 22 ஆம் தேதி அன்று இலங்கை அதிபர் மகிந்திர பால சிறிசேன நீட்டித்து வந்தார்.

இந்த அவசர நிலைச் சட்ட காலகட்டத்தில் காவல்துறையினருக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும்  இந்த தாக்குதலுக்குத் தொடர்பான பயங்கரவாத குழுக்களைப் பிடிக்கவும் இந்த அவசர நிலைச் சட்டம் நீட்டிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சமீபத்தில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான அனைத்து குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளதாகவும் ஒரு சிலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று அவசரநிலை சட்டத்தை நீட்டிப்பதாக சிறிசேன அறிவிக்கவில்லை. இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர், “நாட்டில் தற்போது அமைதி திரும்பி உள்ளதால் அதிபர் அவசர நிலைச் சட்டத்தை ரத்து செய்துள்ளார். அதனால் தற்போது நீட்டிப்பு  அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதன் மூலம் காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இனி குறைக்கப்படலாம்.

மேலும் குண்டு வெடிப்பின் போது இருந்த பாதுகாப்புக் குறைபாடு குறித்து  பாராளுமன்றம் ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில் குற்றம் செய்தோர் கண்டறியப்பட்டு தண்டனை அளிக்கப்பட உள்ளது. இனி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குத் தடையின்றி சுற்றுலா வர முடியும்.” என தெரிவித்துள்ளார்.