டெல்லி: சென்னை உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், அரசு அலவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள், முக்கிய விமான நிலையங்களுக்கு இமெயில் மூலமாக ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த மிரட்டல் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பண்டிகையை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், அந்நாட்டின் இரண்டு பெரிய விமான நிலையங்களுக்கு நேற்று மாலை (திங்கள்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஜெய்ப்பூர் மற்றும் கோவா விமான நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் கூறப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் நிர்வாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. . இதுதொடர்பாக வந்துள்ள மிரட்டல் மெயில், 100க்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை டேக் செய்யப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த மிரட்டல் குறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து தெற்கு கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். விமான நிலைய இயக்குநர் எஸ்.வி.டி.தனம்ஜெய ராவ், மின்னஞ்சல் வந்ததை உறுதிசெய்து, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதுகுறித்து கூறிய மத்தியஅரசு அதிகாரி ஒருவர், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில், இப்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்புப் படையும் உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறை யின்படி நாங்கள் வேலை செய்கிறோம். மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறிய முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.