உடல் எடை : எப்படி குறைகிறது ? எங்கே போகிறது ? உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

உலகம் முழுவதும் உடல் எடை குறைப்பு மற்றும் அதற்கான உணவுமுறை பற்றிய பேச்சு நிறைந்திருக்கிறது. இதில் வெகுசிலர் மட்டுமே நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு (Fat) எப்படி வெளியேறுகிறது என்று அங்குலம் அங்குலமாகக் தெரிந்துவைத்துள்ளனர்.

மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குக் கூட இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லையென்றே புள்ளிவிவரங்கள் கூறுகின்றது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

கொழுப்பு, ஆற்றலாக (Energy) மாறிவிடுகிறது எனும் பொதுவான கருத்தை இந்த ஆய்வு மாற்றியிருக்கிறது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உடலை பாதுகாக்க தேவையான பொருளை சேமித்து வைக்கும் பொருட்களைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் இவ்வாறு கூறப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

150 சுகாதார வல்லுனர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர், கொழுப்பு சதையாக மாறும் என்று கூறியிருந்தனர், இது முற்றிலும் சாத்தியமற்றது.  சிலர், அது பெருங்குடல் வழியாக  கழிவாக வெளியேறிவிடும் என்று கூறியிருந்தனர்.

மூன்று பேர் மட்டுமே சரியான பதிலை சொல்லியிருந்ததாக இந்த ஆய்வை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, தாங்கள் நடத்திய ஆய்வில் 98 சதவீத வல்லுநர்களுக்கு கூடசரியான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆற்றலாகவோ, தசையாகவோ அல்லது கழிவாகவோ வெளியேறவில்லை என்றால் கொழுப்பு என்னவாகிறது ?

கொழுப்பு, இதன் வளர்சிதை மாற்றம் :

கொழுப்பு, கரியமில வாயுவாகவும் (Carbon di Oxide)தண்ணீராகவும் பிரிகிறது, கரியமில வாயு உங்கள் மூச்சு வழியாக வெளியேறுகிறது.  தண்ணீர், உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தந்துவிட்டு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறுகிறது.

10 கிலோ கொழுப்பை கரைக்க வேண்டுமென்றால், அதில் 8.4 கிலோ மூச்சுக்காற்றாக நுரையீரல் வழியே வெளியேறுகிறது, மீதமுள்ள 1.6 கிலோ தண்ணீராக மாறுகிறது, கிட்டத்தட்ட அனைத்தும் மூச்சுக்காற்று வழியே வெளியேற்றப்படுகிறது.

நாம் ஜீரணிக்கும் கார்போஹைட்ரெட்டுகள் மற்றும் ஆல்கஹாலில் உள்ள அனைத்து கொழுப்புகளும் கரியமில வாயுவாகவும் தண்ணீராகவும் மாறி நமது நுரையீரல் வழியே வெளியேறுகின்றன.

அதேபோல், புரத சத்தும் யூரியா மற்றும் பிற திடப்பொருளாக மாறி, யூரியா சிறுநீராக வெளியேறுகிறது.

நார் சத்துள்ள உணவு மட்டுமே நம்  பெருங்குடலில் சென்று சேர்கிறது. நாம் உட்கொள்ளும் மற்ற அனைத்தும், உடல் உறுப்புகளாலும், ரத்த நாளங்களாலும் உறிஞ்சப்பட்டு அப்படியே வெளியேறுகிறது, அவை வேறு எங்கும் செல்வதில்லை.

உட்கொள்ளும் அளவும் வெளியேறும் அளவும்

உடல் பருமன் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமல்ல அனைவருக்குமே புரியாத புதிராக உள்ள ஒன்று  ‘உடல்சக்தி.’

நமது உடல் எடை ஏன் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது என்பதை கலோரிகளை மட்டுமல்ல, நாம் உட்கொள்ளும் உணவின் கிலோகிராம்களை கண்காணித்தாலே இந்த புதிருக்கான விடை தெரிந்துவிடும்.

புள்ளிவிவரப்படி சராசரியாக ஒரு நபர் தினசரி 3.5 கிலோ உணவு மற்றும் நீராகாரம் அருந்துகிறார். இதில் 415 கிராம்  திட ஊட்டச்சத்து, 23 கிராம் நார்சத்து மீதமுள்ள 3 கிலோ நீர்.

இதனுடன் நமது இடுப்பளவிற்கு மிகவும் முக்கியமான நாம் சுவாசிக்கும் பிராணவாயு அளவான 600 கிராமையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஆக, 3.5 கிலோ உணவு மற்றும் தண்ணீருடன் 600 கிராம் பிராணவாயுவையும் சேர்த்து உள்ளே செல்லும் இந்த 4.1 கிலோவும் வெளியேறவேண்டும் இல்லையென்றால் நம் உடல் எடை கூடிவிடும். உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த 4.1 கிலோவிற்கு கூடுதலான எடை வெளியேற்றவேண்டும்.

இதை நாம் எப்படி செய்வது ?

நாளொன்றுக்கு நாம் உண்ணும், சுமார் 415 கிராம் எடையுள்ள கார்போஹைடிரேட், கொழுப்பு, புரதம் மற்றும் ஆல்கஹால் ஆனது 740 கிராம் கரியமில வாயுவாகவும், 280 கிராம் நீராகவும் மற்றும் சிறுநீர் மூலம் வெளியேறும் திடப்பொருளாகவும் மற்றும் 35 கிராம்  யூரியாவாகவும்  மாறுகிறது.

சராசரியாக 75 கிலோ எடையுள்ள ஒரு நபரின் நிலையான வளர்சிதை மாற்றம் (எந்த ஒரு அசைவும் இல்லாமல் நிலையாக இருக்கும் நபரின் உடல் சக்தி எரிப்பு திறன்)  நாளொன்றுக்கு 590 கிராம் கரியமில வாயுவை உற்பத்தி செய்கிறது.

இந்த மாத்திரையை அல்லது மருந்தை மட்டும் குடித்தால் போதும் உங்கள் உடல் எடை தானாக குறைந்துவிடும் என்று விளம்பரப்படுத்தும் மருந்துகள் கூட மேற்கூறிய இந்த உற்பத்தியை அதிகரிக்க முடியாது.

இரவில் நாம் தூங்கும் போதே 200 கிராம் கரியமில வாயு வெளியேறுகிறது, அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நாம் கண்விழிக்கும் முன்னரே வெளியேற்றிவிட்டோம் என்பது ஒரு சந்தோச செய்தியாக இருக்கிறது.

குறைவாக சாப்பிடுங்கள் மூச்சுக்காற்றை அதிகமாக வெளியேற்றுங்கள்

கொழுப்பு கரியமில வாயுவாக மாறுவதால், மூச்சுக் காற்றை மட்டும் நாம் வெளியேற்றினால் நமது உடல் எடை குறைந்துவிடுமா ?

அதிகப்படியான மூச்சுக் காற்றை வெளியேற்றுவது சோர்வையோ மயக்கத்தையோ ஏற்படுத்தக்கூடும். சுயஉணர்வுடன் உங்களது தசைகளை இயக்குவதன் மூலம் மட்டுமே  அதிகப்படியான கரியமில வாயுவை நீங்கள் வெளியேற்ற முடியும்.

குனிந்து நிமிர்ந்து நமது ஆடைகளை உடுத்திக்கொள்ளும் போது சராசரியாக நமது வளர்சிதை மாற்றம் இரட்டிப்பாகிறது. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், 24 மணி நேரமும், நாம் வெவேறு உடைகளை மாற்றி கொண்டிருந்தாலே 1200 கிராம் கரியமில வாயு வெளியேறும்.

ஆனால், உண்மையில், நாம் நடைப்பயிற்சி செய்யும் போது வளர்சிதை மாற்றமானது மூன்று மடங்கு அதிகரிக்கிறது, அதேபோல், சமைக்கும் போதும், வீட்டை சுத்தம் செய்யும் போதும் அதிகப்படியாக மாற்றம் ஏற்படுகிறது.

100 கிராம் கொழுப்பு வளர்சிதை மாற்றமடைய 290 கிராம் பிராணவாயு தேவைப்படுகிறது. இது, 280 கிராம் கரியமில வாயுவையும் 110 கிராம் நீரையும் வெளியேற்றுகிறது, நீங்கள் உண்ணும் உணவு இதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

மொத்தத்தில், 100 கிராம் கொழுப்பை கரைக்க நீங்கள் 280 கிராம் கரியமில வாயுவை வெளியேற்ற வேண்டும். மேலும், உங்கள் உடல் எடையை குறைக்க, நீங்கள் வெளியேற்றும் அளவை விட குறைந்த சத்துள்ள உணவை உண்பதே சிறந்த பலனை தரும்.