அமேதி: போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ‍அமேதி தொகுதியில் ராகுல் நடத்திய பிரச்சாரப் பேரணியில், நியாய் திட்டத்தை விளக்கும் வகையிலான நீல வண்ணக் கொடிகள் இடம்பெற்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உத்திரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக ஒரு பிரச்சாரப் பேரணியை நடத்தினார். அப்பேரணியில், அவரும், அவருடைய தங்கை பிரியங்காவும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் ஒரு புதிய அம்சமாக, தொண்டர்களால் நீல வண்ணக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்தன. அக்கொடியில், ராகுல் காந்தியின் படத்துடன், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள நியாய் திட்டம் தொடர்பான சில விபரங்களும் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் வாடும் 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.72,000 வழங்கும் வகையிலான திட்டம்தான் இது. நீல வண்ணக் கொடிகள் என்பது பொதுவாக தலித் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகளால் பயன்படுத்தக்கூடியவை.

ஆனால், காங்கிரஸ் பேரணியில் இத்தகையக் கொடி பயன்படுத்தப்படுவது பலரின் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது.

– மதுரை மாயாண்டி