வெற்று காகிதத்தில் கையெழுத்து, துப்பாக்கி முனையில் பொதுக்குழுவுக்கு கூட்டி போனார்கள்! மகிழன்பன் பேட்டி

Must read

சென்னை,

ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுகவிலும்,  தமிழக அரசியலிலும் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஜெ இறந்த 20 நாட்களுக்குள் தனது விசுவாசிகளின் துணையோடு அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார் சசிகலா. அதைத்தொடர்ந்து தற்போது அதிமுக எம்எல்ஏக்களின் துணை யோடு முதல்வராக பதவி ஏற்க துடித்து வருகிறார்.

இதற்கிடையில் சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

கடந்த டிசம்பர் 29ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு கூடியது. இந்த பொதுக்குழுவில் 280 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 2770 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக அதிமுக செய்தி கூறியது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் செய்திகள் வெளியாகின.

அதைத்தொடர்ந்து டிசம்பர் 31ந்தேதி அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

சசிகலாவின் திரைமறைவு செயல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 29ந்தேதி, சென்னை வானரகத்தில் கூடிய  அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார் சென்னை எழும்பூர் பகுதி அதிமுக செயலாளர் மகிழன்பன்.

அவர் கூறியதாவது,

டிசம்பர் 29ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களை மிரட்டி வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கினர்.  சசிகலாவும், நடராஜனும் சட்டம் குறித்த அச்சமே இல்லாமல் ஒரு புதிய உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.

அம்மா (ஜெயலலிதா)  காலத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் எப்படி நடக்கும் என்பதையாவது இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாமா?  கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அம்மா (ஜெயலலிதா) தன்னை அறிவித்துக் கொண்டாலும், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை கட்சி முறைப்படி அறிவிப்பார்.

அதற்காக அறிவிப்பு வெளியிடப்படும். அதில்,  ‘பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது, போட்டியிட விரும்புவோர், தங்கள் விபரங்களைக் கொடுக்கலாம்’ என்று அந்த அறிவிப்பில் சொல்ல பட்டிருக்கும்.

ஆனால்,  சசிகலா அதை ஏன் செய்ய வில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

காரணம்,  அப்படிச் செய்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தீபா அம்மா வீட்டுக்குத் தான் போயிருப்பார்கள். கட்சிக்குப் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அவர்கள் தி.நகருக்குத்தானே போகமுடியும் என்றார்.

மேலும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அம்மா அனைத்தும் அறிந்தவர். ஊடகம் தொடர்பில் படித்திருக்கிறார், பண்பாகப் பேசுகிறார், மொழியறிவும் இருக்கிறது.  வீட்டைத் தேடிப்போய் நிற்கிற தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்லவும் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தைரியம் கொடுக்கவும் அம்மாவைப் போலவே நம்பிக்கை தருவது தீபா அம்மா மட்டும்தான்.

அம்மா வாழ்ந்த அந்த புண்ணியத்தலம், போயஸ்கார்டனுக்கு தீபா அம்மாவைக் கொண்டுபோக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.

‘சசிகலா தரப்பு செய்துள்ள சகல குளறுபடிகளையும், விதி மீறல்களையும் விளக்கமாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்று கூறிய மகிழன்பன்,

பொதுக்குழுவில் தங்களிடம்  துப்பாக்கி முனையில் கையெழுத்து வாங்கினர்  என்றார். மேலும் தன்னை காரில் கடத்திதான் பொதுக்குழுவில் கையெழுத்தே வாங்கினார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார்.

என்னைப்போல எத்தனை பேரிடம் இதுபோல கைழுத்து பெறப்பட்டதோ தெரியவில்லை என்றார். மேலும், என்னிடம் கையெழுத்து வாங்குவதற்காக,   வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நா.பாலகங்காவே என்னை தொலைபேசியில் அழைத்தார்., ‘கொஞ்சம் வருகிறீர்களா?’ என்று கூப்பிட்டார்.

நானும், நமது  மாவட்டச் செயலாளர் கூப்பிடுகிறாரே என்று நம்பிப் போனேன். அப்போரு ஒரு சிலர் என்னைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி பொதுக்குழுவுக்குக் கொண்டு போனார்கள். அங்கு என்னிடம் வெற்றுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.

அவர்களின் அவசரத்தில் அன்று ஒரு தவறு செய்தனர்.

‘பொதுக்குழு உறுப்பினராகிய த.மகிழன்பன் ஆகிய நான் சசிகலாவை பொதுச் செயலாளராக கொண்டு வரும் படிவத்தில் கையெழுத்திடுகிறேன்’ என்று சொல்லிதான் கையெழுத்தே வாங்கி யிருக்கவேண்டும்.

ஆனால் அப்படி பெறவில்லை. அவர்களிடம்  பதவியை அடையும் வேகம், ஆத்திரம் மட்டுமே இருக்கிறது. கடத்திப்போய் படிவத்தில் கையெழுத்து வாங்கத் தெரியாத கைநாட்டுகளிடம்தான் இப்போது கழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

மேலும்,  என்னைப் போலவே பலர் பொதுக்குழுவில் கையெழுத்து போட கட்டாயப் படுத்தப் பட்டோம். ஆனால் யாரிடமும் அங்கே படிவத்தில் கையெழுத்து வாங்கவில்லை. படிவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இப்போது அங்கிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கட்சியை இவர்கள் எப்படிக் காப்பாற்றமுடியும் ? நல்ல விலைக்கு விற்காமல் இருந்தாலே போதும்” என தெரிவித்துள்ளார்.

மகிழன்பனின் இந்த அதிர்ச்சி தகவல்  தமிழக  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article