டெல்லி: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வீடுகள் தோறும் கருப்புகொடி ஏற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த அரசியலமைப்பு சட்ட திருத்தம், உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக் களை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமு கதலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்பட தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்தியஅரசின் தொகுதி வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மாநிலம் முழுவதும் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவரும், மாநில முதல்வருமான ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்! தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! Let the black flags rise! என குறிப்பிட்டுள்ளார்ல.
அவரது வீடியோவில் , “டிலிமிட்டேஷன் என்ற பெயரில் பாஜக அரசு தனது லிமிட்டை தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்கும் வகையில் தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில் நடப்பதை பார்த்துக் கொண்டு தமிழ்நாடு சும்மா இருக்காது. ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் எனத் தெரிவித்திருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத மத்திய பாஜக அரசு இதையும் கேட்கவில்லை.
சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நாளை கொண்டுவரப்போகும் சட்டத் திருத்தத்தால் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் தொகுதிகள் வேறுபடும்.தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படும் எனக் கூறிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையைக் கொண்டு வரப் போகிறார்கள். இதைதான் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனக் கூறுகிறோம்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால் எங்களின் அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா? தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக பார்க்கிறீர்கள். டெல்லி பாஜகவுக்கு தமிழர்கள் யார் எனக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் நாளை அவர்கள் கொண்டு திட்டமிட்டிருக்கும் கருப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுங்கள்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்..
[youtube-feed feed=1]