நாக்பூர்
மத்திய அரசின் விவசாயக் கடன் திட்டம் பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என ஆர் எஸ் எஸ் அமைப்பின் விவசாய பிரிவான பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் விவசாய பிரிவு பாரதிய கிசான் சங்கம் என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த பிரிவில் சுமார் 20 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இந்த பிரிவு கடந்த வார இறுதியில் நாக்பூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பல முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதிநிதி சபா என அழைக்கப்பட்ட இந்த மாநாடு கடந்த ஞாயிறு அன்று நிறைவு பெற்றது.
இந்த மாநாட்டில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் சங்க தலைவர் பத்ரிநாராயண் சௌத்ரி தெரிவித்துள்ளார். அவர், “விவசாயிகள் தற்போது மிகவும் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடைப் பேரணியே இதற்கு சான்றாகும். நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு பல உதவிகள் அளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கும். கடன் உதவிக்கு தகுதி பெறுவதும் பணக்கார விவசாயிகளாகவே உள்ளனர்.
இதை தடுக்க எரிவாயு மானிய திட்டத்தை போல பணக்கார விவசாயிகள் தங்கள் உதவிகளை விட்டுத் தர முன் வர வேண்டும். அப்படி செய்தால் அரசு அறிவித்த ரூ.500 கோடி நிதி உதவி ஏழை விவசாயிகளுக்கு போய் சேரும். நாடு முழுவதும் உடனடியாக ஒரு புதிய விவசாயக் கொள்கை அமைக்கப்பட்டு அதை அமுல்படுத்த வேண்டும். அந்த கொள்கையின் மூலம் விவசாயிகளின் தற்போதைய நிலை நேர்மையாக கண்டறியப்பட்டு அதற்கேற்ப உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சௌகான் விவசாயிகளுக்கு பல நலத் திட்டங்கள் அறிவித்ததற்கு பாராட்டுகிறோம். அதே நேரத்தில் அந்த திட்டங்கள் சரியான முறையில் நடத்தப்பட்டு விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். முதல்வர் எங்களுடன் இது குறித்து பல நாட்கள் விவாதித்த பின்னர் இந்த திட்டங்களை அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அரசு கடன் தள்ளுபடி செய்துள்ளது வரவேற்கத் தக்கது. ஆனால் ஒவ்வொரு முறையும் இது போல தள்ளுபடி செய்ய முடியாது. அதே நேரத்தில் இவ்வாறு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயி கடனை திருப்பி செலுத்தாதவர் என்னும் கணக்கில் வந்து விடுகிறார். அதனால் அவருக்கு அடுத்த முறை கடனோ அல்லது அரசு உதவிகளோ பெற முடிவதில்லை. இதை அரசு மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.