பா.ஜ.க.வின் தப்பாட்டம்… சைனாவுக்கு கொண்டாட்டம்! நியோகி

Must read

மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: 

அத்தியாயம் -2

தென்கிழக்கு ஐரோப்பாவில் மலைகள் சூழ்ந்த மாஸிடோனிய நாட்டில் ஒரு சுவாரசியமான பழக்கம் உண்டு ! அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்தக் குழந்தையின் தாயோ – தந்தையோ அல்லது மத குருமார்களோ பெயர் சூட்டுவதில்லை !

மாறாக, குழந்தை பிறந்ததும் – பிரசவத்துக்கு துணை செய்த தாதியாகப்பட்டவள் தெருவில் இறங்கி ஓடுவாள் ! தன் கண்ணில் படும் முதல் வழிப்போக்கரை வணங்கி. “ஐயா, தங்கள் பயணம் இனிதாகட்டும் ! எங்கள் மனையில் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்த  அழகான குழந்தைக்கு நல்லதொரு பெயரை சொல்வீர்களா…” என்று படபடத்த படி முகம் பார்த்துக் கேட்பாள்.

வழிப்போக்கரும் விண்ணைப் பார்த்து, “ஃபாலா போகு” “ “ஃபாலா போகு” (கடவுளுக்கு நன்றி) என்று உச்சரித்தபடியே தன் மனதில் தோன்றியதொரு பெயரை சொல்வார். அன்று முதல், அதுவே அந்தக் குழந்தைக்கு பெயராக வழங்கப்படும் !

அப்படித்தான்,1911ஆம் ஆண்டு ஜனவரியின் இறுதி நாளில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு “வங்கேலியா பாண்டெவா டிமிட்றோவா” என்று நாமகர்ணம் செய்யப்பட்டது!

சென்ற நூற்றாண்டின் இறுதி வரை வாழ்ந்த அந்தப் பெண்மணி எதிர்காலத்தைக் கணித்து சொல்லும் தீர்க்க தரிசியாக பெரும் புகழ் பெற்றார். மக்கள் அவரை சுருக்கமாக “பாபா வான்கா” என்று அழைத்தார்கள். பிறவிக் குருடராக இருந்தாலும் கூட, அவரது “எதிர்காலக் கணிப்புகள்” மிகப் பிரசித்தனமானவைகள் !

2001 ஆண்டை அதிர்சிக்குள்ளாக்கிய அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பை, 1989 ஆண்டே சொல்லி விட்டவர் பாபா வான்கா.  சிரியா போரைப் பற்றியும், சுனாமியைப் பற்றியும், விளாடிமீர் புட்டினைப் பற்றியும் கூட முன் கூட்டியே கணித்து சொல்லி ஆச்சரியப்படுத்தியவர்.

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்பதற்கு 13 வருடங்களுக்கு முன்பே பாபா வான்கா இப்படி சொன்னார்…

“அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக ஒரு ஆஃபிரிக்க – அமெரிக்கர்தான் வருவார், அவரே, அமெரிக்காவின் கடைசி அதிபராகவும் இருப்பார்…”

இப்போது, ட்ரம்ப் போகும் போக்கைப் பார்த்தால், அமெரிக்காவில் சிவில் வார் ஒன்று உருவாகி விடுமோ – அமெரிக்காவின் செட்டப்பையே அது மாற்றி அமைத்து விடுமோ என்னும் வான்காவின் எண்ணத்தைத்தான்  நாமும் கொள்ள வேண்டியதாயிருக்கிறது !

1996 ஆம் ஆண்டு மறைந்து போனார் பாபா வான்கா ! மறைவதற்கு முன்பு, அவர் சொல்லிச் சென்றதெல்லாம் அதிர்ச்சி ரகம் ! 2076 – ல் உலகையே கம்யூனிஸம் ஆளும் ! 2130 ல் பூமிவாழ் மனித சமூகம், வேற்றுக் கிரக வாசிகளின் துணையோடு கடலுக்கடியில் வாழக் கற்றுக் கொள்ளும் ! 3797 ஆம் ஆண்டில், மனித சமூகம் புதிய கிரகத்தில் காலனி அமைக்கும் ! இப்படி இன்னும் என்னென்னவோ சொல்லிப் போயிருக்கிறார்.

சரி, பாபா வான்காவுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்…? இருக்கிறது. ஆம், “பாபா வான்கா” ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்பே சொன்னார்…

“2018 – ல்… அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீனா பின்னுக்கு தள்ளப் போகிறது”! மேலும் சொன்னார், “சீனா,உலக வல்லரசாகப் போகிறது”. என்ன ஆச்சரியம்…? இன்று சர்வதேச நாணய நிதியமும் அதையே  சொல்கிறது.

சரி இப்போது கட்டுரைக்குள் செல்வோம் ! பாபா வான்காவின் கூற்றுப்படி,  சீனா உலக வல்லரசாக வேண்டும் என்றால்… முதலில், அது தன் பிரதேச வல்லாதிகத்தை நிலை நாட்டியாக வேண்டும்..! அதாவது,  ஆசியாவை தன் கைக்குள் கொண்டு வந்த பின்புதான் அது உலக அரசியலை நோக்கிப் போக முடியும் ! ஆனால், இன்று வரை ஆசியாவின் பெரியண்ணனாக  ஆதிக்கம் செலுத்த சீனாவால் முடியவேயில்லை !

அப்படி பிரதேச வல்லாதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு சீனாவின் பாதையில் தடையாக நிற்பது எது…? சந்தேகமே வேண்டாம் !  அந்த வல்லமையைப் பெற்ற ஒரே நாடு நமது இந்தியா தான் !

அதனால்தான் சீனாவை முடக்கி வைக்க அமெரிக்கா – ரஷ்யா உட்பட அனைத்து  நாடுகளும் இந்தியாவை உலகளவில் மறைமுகமாக ப்ரமோட் செய்து வருகின்றன. மோடியும் உலகம் முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆக, சீனாவின் உலக வல்லரசுக் கனவுக்கு, உடனடித் தடையாக இருக்கும் இந்தியாவை, தன்னால் முடிந்த அளவுக்குத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று சீனாவும் முயலும் என்பது எளிதான அரசியல் கணக்கு !

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்…இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் தமிழகத்தில், தேச ஒற்றுமைக்கு எதிரானதொரு கருத்து வலுப்பட்டால், அப்படி ஒரு மன நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டால், சீனா அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறாது என்றே தோன்றுகிறது ! ஆம், சீனாவின் ட்ராகன், இங்கே தரையிறங்கக் கூடும் !

பொருளாதாரத்தில் இந்தியாவை விட ஆறு மடங்கு வளர்ச்சி பெற்ற நாடாக சீனா இருந்தாலும், இந்தியாவைப் பார்த்து சீனா தயங்குவதற்கு ஒரே காரணம் இந்தியா காட்டும் வேற்றுமையில் ஒற்றுமை.

பன்முகத் தன்மை கொண்டதொரு நாட்டில் எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றாகவே பிணைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு உலகமே அதிசயிக்கிறது.

அதே நேரம், சீனா ஆயாசப்படுகிறது. அந்த நாடு புனிதக் கடவுளாகக் கொண்டாடும் புத்தர் பெருமான் பிறந்த தேசத்தின் மேல் அதற்கு ஒரு கண் இருப்பதை மறுக்க முடியாது.

ஒருவேளை, உலகமே கண்டு அதிசயிக்கும் அந்த வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பெருமைக்கு வேட்டு வைத்து விட்டால் இந்தியாவின் ஜிடிபியை குலைத்து விடலாம் என சீனா கணக்கு போடலாம். அதன் மூலமாக இந்தியாவின் வேகத்தைக் குறைத்து மெல்ல மெல்ல தனது வல்லாதிக்கக் கனவின் வண்ணங்களைக் கூட்டலாம் என்று நெற்றி மேட்டைத் தட்டி யோசிக்கலாம். அதற்கு நுழைவாயிலாக தமிழ்நாடு வாய்த்து விட்டால் இரண்டு அல்ல மூன்று லட்டுகள் தின்னலாமே என்றும் பரபரக்கலாம்.

காரணம். ஐடி துறையில் இந்தியாவின் அறிவுக் கிடங்காக விளங்குவது தமிழ்நாடு. இரண்டு துறைமுகங்கள் இங்கு இருக்கின்றன. கல்ப்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் இங்கே இருப்பது  குறிப்பிடத்தக்கது. தொழில் முனைவோர்கள் அதிகம் கொண்டது தமிழ் நாடு. இந்தியாவின் ஒன்பதில் ஒரு பங்கு தொழிலதிபர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.

தண்ணீர் போன்ற விஷயங்களில் தமிழ்நாடு தன்னிறைவு அடைந்து விடவில்லை என்றாலும், அதனை சரிசெய்து கொள்ள முடியும்.  இப்போது தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எண்ணி கவலைப்பட வேண்டாம் . தமிழ்நாடு தனி நாடு என்றாகிவிட்டால், அது அண்டை நாடு என்றாகி விடும். அப்போது, தண்ணீர்  தந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அது உலகப் ப்ரச்சினை ஆகிவிடும் ! சீனாவுக்கோ – பாகிஸ்தானுக்கோ தண்ணீர் தரமுடியாது என்றால் என்னவாகும்….? அப்படித்தான் ! இப்படியெல்லாம் சொல்லித் தந்து, சீனா பின் நின்று இயக்கலாம் !

ஒவ்வொரு வருடமும் 3000 மாணவர்கள் மருத்துவம் பயில சீனாவுக்கு செல்கிறார்கள், அதில், பத்துசதவிகிதம் பேர், அதாவது. 300 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். அங்கே, தமிழ் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில், அருமையான கல்வி கொடுக்கப்படுகிறது. சீனாவின் மேல் அவர்களுக்கு தானாகவே ஓர் நல்லெண்ணம் பிறந்து விடுமளவுக்கு, நல்ல கவனிப்பும் அளிக்கப்படுகிறது.

இன்று உலகமெங்கும் விரிந்து பரந்து 29 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யூதர்கள் எங்கிருந்தாலும் தங்கள் பெருமைக்குரிய தாயகமாக இஸ்ரேலைக் கருதுவது போல உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தங்களுக்கொரு தாயகமாக தமிழகம் அமைய வேண்டும் என விரும்பி, இந்தக் கருத்தை ஆதரிக்கக் கூடும். சீனாவும், அதை முடுக்கி விடக் கூடும்.

இப்படியெல்லாம் சொல்வதால் என்னை ஏதோ தேசபக்தி இல்லாதவன் என்று கருதிவிடலாகாது. இந்தக் கட்டுரையின் நோக்கம், சீனா தமிழகத்துக்குள் நுழையட்டும் என்பதல்ல. நுழைந்து விடக் கூடும் என்று கட்டியம் கூறுவதுமல்ல. மாறாக, அதற்குண்டான சூழலை  தேவையில்லாமல் உருவாக்கி வைப்பது நமக்கு நல்லதல்ல என்று ஓங்கி உரைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஆம், தமிழகத்தின் நிலைமை இப்போது அப்படித்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் பாஜகவின் அவசரம், ஆர்ப்பாட்டம் , அண்டர் த பெல்ட் அடிக்கும் தப்பாட்டம் ! இதுவே சைனாவிற்கு கொண்டாட்டமாக மாறும் வாய்ப்பை உருவாக்கிவிடும்.

இதோ, காவிரியில் தண்ணீர் தர காலமெல்லாம் மறுத்து வந்தது கர்நாடகம். திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்தினால்…. காவிரி நீரில் தமிழகத்துக்கு பாத்தியதைப்பட்ட 419 டி.எம்.சி தண்ணீரை தரச் சொல்லி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தது. ஆனால், அதை மத்திய அரசு அரசிதழில் வெளியிட தாமதித்தது. மேலும், மேலும் தமிழக அரசு போராடி, ஒருவழியாக அரசிதழில் வரவைத்த பிறகும் இன்னும் தண்ணீர் வந்த பாடில்லை ! வரலாறு காணாத வறட்சியில் தமிழகம் இங்கே பொசுங்கிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசாங்கத்திடம் வறட்சி நிதியாக தமிழகம் 39,565 கோடிகள் கேட்டால்…ஏதோ கேலி செய்வது போல, வெறும் 1748 கோடி மட்டுமே ஒதுக்குகிறது. இந்த அணுகுமுறை வறட்சியை விடக் கொடுமையானது.

ஆனால், இலங்கையில் வறட்சி என்று உடனடி உதவியாக 8 தண்ணீர் டாங்கர்களும் – 100 மெட்ரிக் டன் அரிசியும் கொடுக்கிறது மத்திய அரசு . அது,  பயிர்கள் கருகிக் கிடக்கும் தமிழகத்தைக் கடந்துதான் இலங்கைக்குப் போகப் போகிறது. இதற்குப் பெயர்தான் கறுப்பு நகைச்சுவை .

மக்களுக்கு எந்த ஒரு விளக்கமும் சொல்லாமல் மீத்தேன் எடுக்கிறோம் – ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்று நோண்டிப் போட வேண்டியது. போராடுபவர்களிடம் தவறான வாக்குறுதிகளைத் தந்துவிட்டு அங்கே சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டியது.

இதைப் பற்றி யாரும் கேட்டால்… அவர்களை கேலிச் சிரிப்போடு உதாசீனப்படுத்தி மகிழ்வது.  இப்படிப்பட்ட அணுகுமுறைகளை எல்லாம் படித்த இளைஞர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழக பாஜகவினரின் இந்த அணுகுமுறை  நல்லரசியலுக்கு ஏற்றதல்ல !

(தொடரும்)

https://patrikai.com/again-arise-a-separate-country-tagline-in-tamilnadu-niyohi/

More articles

Latest article