மும்பை:

கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியை காப்பாற்றத்தான் பாஜக முயற்சி செய்தது. இது காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி கிடையாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கர்நாடகா அரசியல் விவகாரம் குறித்த ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில், “ கர்நாடகாவில் எடியூரப்பாவின் அரசை காப்பாற்ற பாஜக முயற்சி செய்தது. இது காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான வழி கிடையாது. இது ஜனநாயகத்தையும், தனி நபர் சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் வலுவிழக்க செய்யும். ஜனாதிபதியும், ஆளுநர்களும் சமயங்களில் அரசின் ஏஜென்ட்களாக செயல்படுகிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வருவதில் தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது.

கர்நாடக சட்டசபையில் நடந்தது அரசியலைமைப்புக்கு விரோதமானது.. அரசியலமைப்பு என்பது மக்களின் பொது எதிர்பார்ப்புகளையும், நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மக்கள் தான் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். அதனால் அரசியலமைப்பு மக்கள் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. மக்கள் மத்தியில் தன்னுடைய சொந்த முடிவுகளை திணிக்க அரசியலமைப்பை பயன்படுத்த முடியாது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.