கும்பகோணம்:  நாட்டில், ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் பாஜக ஆட்சியின் நோக்கம்  என்று திருச்சி சிவா  விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனல்பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. திருச்சி கும்பகோணத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சுதாவை ஆதரித்து  வாக்கு சேகரித்தார்.  அதைத்தொடர்ந்து நேற்று இரவு கும்பகோணத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பேசும்போது கூறியதாவது.

நாடாளுமன்ற மேலவையில் குடியுரிமைச் சட்டம் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 99 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக124 வாக்குகள் பதிவாயின. அரசுக்கு அதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்ததனால் அந்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறியது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு விற்றது. இன்று 100 ரூபாய். எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாய். மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் இந்த விலை உயர்வினால் பாஜக அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்தது. மக்கள் தலையில் பாஜக அரசு சுமையை ஏற்றியது.

இந்த சுமையை இறக்கும் வகையில் பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணம் என திமுக அரசு திட்டம கொண்டு வந்தது.

பாஜக அரசின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக வேண்டும் என்பதே என்றார். ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து முதலில் திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர். அதனை தொடர்ந்து அந்தச் சட்டம் நிறுத்தப்பட்டது என்றவர், மக்களுக்கு ஆதரவாக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என திருச்சி சிவா தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக கச்சத்தீவு பற்றி பேசி வருகிறார்கள். முதலில் இந்தியாவில் ஒரு மாநிலமான அருணாச்சல் பிரதேசம் தனக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. அந்த மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சீனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, காஷ்மீரில் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதைப்பற்றி பேச காணோம் முதலில் நாட்டின் மாநில எல்லையோரம் உள்ள இடங்களின் பிரச்சினைகளை தீர்த்து விட்டு கச்சத் தீவு பிரச்சனைக்கு வரட்டும்,

புயல் வந்ததற்கு பணம் கேட்டோம், வெள்ளம் வந்ததற்கு பணம் கேட்டோம் தரவில்லை. ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா நமக்கு ஒன்றிய அரசு தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் 75 காசு தருகிறது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஒரவஞ்சனை தான் செய்துள்ளது.

நீங்கள் நிம்மதியாகவும், நல்லபடியாகவும் இருக்க வேண்டும், நாடும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கம். நமக்குத் தேவை ஜனநாயகமா? எதேச்சாதிகாரமா? அது உங்கள் கையில் உள்ளது என திருச்சி சிவா தெரிவித்தார்.