மும்பை

மது கட்சியில் சேர விரும்புவோருக்கு பாஜக என்றும் கதவை மூடாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறிஉளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள பாஜக அல்லாத கட்சியினர் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். இதற்கு கொள்கை பிடிப்பு உள்ளிட்ட பல காரணங்களை அவர்கள் கூறிய போதிலும் பதவி ஆசை தான் முக்கிய காரணம் என அனைவரும் அறிவார்கள்.

தற்போது கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மஜத – காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 13 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் மற்றும் மூவர் மஜதவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதன் மூலம் கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைப் போல் பாஜக ஆளும் கோவா மாநிலத்திலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மும்பையில் செய்தியாளர்களிடம், “பாஜக தனது மத்திய ஆட்சியின் வலிமையால் தென் மாநிலங்களில் உள்ள எதிர்கட்சி ஆட்சிகளை கலைப்பதாக கூறுவது தவறான கருத்தாகும். நாங்கள் எந்த ஒரு கட்சியையும் கலைக்க விரும்பவில்லை.

அதே நேரத்தில் எங்கள் கட்சியில் இணைய ஆர்வம் கொண்டு வருபவர்களுக்கு கதவை மூடுவதும் கிடையாது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் விலகி பாஜகவில் இணைகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாததே முக்கிய காரணம் ஆகும். அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பது மற்றொரு காரணம் ஆகும். கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ளவர்கள் கட்சியின் போக்கு பிடிக்காமல் மோடியின் தலைமையின் கீழ் பணி புரிய விரும்பி ராஜினாமா செய்துள்ளனர்.” என தெரிவித்தார்.