டில்லி:

திரிபுரா மற்றும் தமிழகத்தில் சிலை உடைப்பு விவகாரம் குறித்து  பா.ஜ.க-வினரிடம் கட்சி மேலிடம் விசாரணை நடத்தி அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாது என கூறி உள்ளார்.

காலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நிலையில் சுமார் 4 மணி நேர இடைவெளியில், நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் பல்டியடித்திருப்பது, தமிழகத்தில் திட்டமிட்டே வன்முறையை தூண்ட பாஜக விரும்புகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுராவில் 25ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சியை வீழ்த்தி பாரதியஜனதா ஆட்சி கட்டிலை கைப்பற்றியதை தொடர்ந்து, அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது.  இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,  ‘திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை’ எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

ராஜாவின் பதிவு தமிழக மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவிததனர். அதையடுத்து எச்.ராஜாவின் பதிவு நீக்கப்பட்டது. இன்று மன்னிப்பும் கோரியிருக்கிறார்.  இந்நிலையில், நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலை பாஜகவினரால் உடைக்கப்பட்டது. மேலும் கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இன்று தமிழகம் முழுவதும் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில், சிலை உடைப்பு விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலையை உருவாக்கி உள்ளதால், அனைத்து மாநிலங்களும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி டுவிட் செய்திருந்தார்.

அதில்,  சில தினங்களாக நடைபெற்றுவரும் சிலை உடைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிருப்தி அளிப்பதாக உள்ளது இதுபோன்ற செயல்களுக்கு பா.ஜ.க. ஒருபோதும் ஆதரவு அளிக்காது.

திரிபுரா மற்றும் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரிடம் கட்சி மேலிடம் விசாரணை நடத்தும். அப்படி இந்தச் சம்பவங்களில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தால் கட்சி அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொள்வதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது, இது போன்ற செயல்களின் மூலம் மக்களின் வாழ்க்கையும் புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளும் பாதிக்கப்படுகிறது என அவர் பதிவிட்டிந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களின், எச் ராஜா குறித்த  கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, ராஜாமீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று கூறினார்.

அமித்ஷாவின்  மாறுபட்ட பேச்சு தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கமல் கூறியதுபோல, காவிரி பிரச்சினையை திசை திருப்பவே இதுபோன்ற சர்ச்சை பதிவுகளை வெளியிட்டு, தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட பாஜக முயன்று வருவதாக சமூக வலைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.