ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் என்று பல்வேறு தரப்பினரின் நூற்றுக்கணக்கான தொலைபேசி எண்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

சஞ்சய் கச்சரோ

இந்நிலையில், பா.ஜ.க. வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ப்ரஹலாத் சிங் படேல், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் உதவியாளர், மற்றும் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியின் சிறப்பு காரியதரிசி சஞ்சய் கச்சரோ ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

நூற்றுக்கணக்கானோரின் தொலைபேசி தரவுகளை வேவு பார்த்திருக்கும் நிலையில், பா.ஜ.க. மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களின் எண்களும் இந்த கண்காணிப்பு வளையத்தில் இருந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பலரின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணரும் அரசாங்கங்கள் என்.எஸ்.ஓ. நிறுவனத்தை நாடி தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களின் தரவுகளை ஆராயசொல்வது வழக்கம் என்றபோதும், இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சியைச் சேர்ந்தவர்களையே கண்காணிக்க சொன்ன வாடிக்கையாளர் யார் என்பது குறித்து என்.எஸ்.ஓ. நிறுவனம் இதுவரை மூச்சு விடவில்லை.

மோடியின் நீண்ட கால எதிர்பாளரான விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மற்றும் பல்வேறு பா.ஜ.க. நிர்வாகிகளின் மொபைல் எண்களும் ஒட்டுகேட்கப்பட்ட நிலையில், இந்த எண்களுடன் தொடர்புடைய அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவராததால், என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.