இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. வின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ, மத்திய அரசு பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார், அவர் இவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, அவரது மொபைல் எண்ணும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டு மொபைல் எண்களும் உள்ளது, இது தவிர, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகாரளித்த பெண்ணின் தொலைபேசி எண் உள்ளிட்ட அவரது உறவினர்கள் பதினோரு பேரின் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளது.

2019 தேர்தலின் போது ராகுல் காந்தியின் மொபைல் எண்ணை கண்காணித்தவர்கள், அவரது இரு உதவியாளர்களின் எண்ணையும் ஒட்டுகேட்டுள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்த பிரபல அரசியல் பிரசார ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் எண்ணையும் வேவு பார்த்துள்ளனர், பிரசாந்த் கிஷோரின் எண் ஜூலை மாதம் 14ம் தேதி வரை ஒட்டுகேட்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

சட்டப்படி அமைக்கப்பெற்ற அரசின் பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்கும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை உபயோகப்படுத்தி, நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் மறுப்புக்குப் பின், மத்திய அமைச்சர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களின் தொலைபேசி உரையாடலை, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக ஒட்டுக்கேட்டது யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

தொலைபேசிகளை பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி ஹேக் செய்தவர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்