இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்தல் சமயங்களில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆளும்கட்சிக்கு எதிரானவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை விலைக்கு வாங்கி அந்த மாநிலத்தின் பிரதான கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந்த குதிரை பேரத்திற்காக கைமாறும் தொகைக்கு ஜிஎஸ்டி கணக்கு கூட காட்டுவதில்லை என்றும் முனுமுனுக்கப்படுகிறது.
இதில் கைதேர்ந்த சாணக்கியராக பாஜகவினரால் புகழப்படுகிறார் அமித்ஷா. இதற்கென தனி குழு அமைத்து செயல்படும் பாஜக தற்போது தெலுங்கானாவில் இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
டி ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக உயர்மட்ட தலைவர்களின் தூதராக ராமச்சந்திர பாரதி நடத்தும் பேச்சுவார்த்தை அடங்கிய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கண்களில் பணத்தையே காட்டக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வரும் பாஜக அரசு மாற்றுக்கட்சியினருக்கு மட்டும் இதுபோன்று பணத்தாசை காட்டி பேரம் பேசி வருவதுடன் இதற்காக அந்த மாநிலங்களில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரமிக்கவர்களின் மாளிகைகளை ரகசிய ஆலோசனை நடத்தும் இடமாக மாற்றி வருகிறது.
இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தெலுங்கானா மாநில முதல்வரும் டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான கே.சி. சந்திரசேகர ராவ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த வீடியோவை திரையிட்டுக் காட்டியதோடு அமித்ஷா, ஜெ.பி. நட்டா மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் மீது குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் பேரம் பேச வந்த நபர்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் யாருக்காக இந்த வேலையில் இறங்கினார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், இதுபோன்ற வீடியோ-க்கள் டி.ஆர்.எஸ். கட்சியினரிடம் ஏராளமாக உள்ளதாகவும் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகி பாஜக-வினரின் பசுத்தோல் போர்த்திய முகத்திரையை கிழிக்கும் என்றும் கே.சி.ஆர். எச்சரித்துள்ளார்.