கவுகாத்தி:

மியான்மரில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அஸ்ஸாம் பாஜக மாநில செயற் குழு தலைவரான பெனாசிர் அர்ஃபான் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட் டுள்ளார்.

கடந்த 16ம் தேதி மியான்மரில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையால் 4.09 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவுக்குள் வர மத்திய அரசும், அஸ்ஸாம் மாநில பாஜக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கவுகாத்தியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஐக்கிய சிறுபான்மை மக்கள் அமைப்பு சார்பில் அகதிளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று நடத்தியது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த பெனாசிர் அர்ஃபான் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதைதொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் திலீப் சாய்கிய, அர்ஃபானை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து 3 நாட்களுககுள் விளக்கம் அளிக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த கடிதத்தில், ‘‘பாஜக உறுப்பினராக இருந்து கொண்டு மியான்மர் விவகாரம் தொடர்பாக இதர அமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு கட்சியிடம் கலந்து ஆலோசிக்காமல் ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். இது கட்சியின் விதி மற்றும் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுகிறது. அதனால் கட்சியில் இருந்து நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அர்ஃபான் கடந்த ஆண்டு நடந்த அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பார்பேடா மாவட்டத்தில் உள்ள ஜனியா தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவான இரங்கல் கூட்டத்தில் கல ந்துகொள்ள வேண்டும் என்று தான் கூற நினைத்தேன். ஆனால் தவறுதலாக உண்ணாவிரத போராட்டம் என்று தெரிவித்துவிட்டேன். இதற்கு நான் வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனால் இதை கட்சி கவனி க்கவில்லை’’ என்றார்.

30 வயதாகும் இவர் முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டவர். கடந்த காலங்களில் கட்சி சார்பில் முத்தலாக் முறைக்கு எதிராக பேசி வந்தார். ஆனால், தற்போது தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.