டில்லி:

பயிற்சி இல்லாத நபர்கள் மற்றும் அதி வேகமாக வாகனம் ஓட்டுவோரும் ஓட்டுனர் உரிமம் பெறுவதை த டுக்கும் வகையில் ஓட்டுனர் உரிமம் பரிசோதனை தேர்வை வீடியோவில் பதிவு செய்யும் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதாக ஆம்ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.

டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞச் முன்பு அரசு வக்கீல் சத்யகம் இதை தெரிவித்தார். அதேபோல் எழுத்து தேர்வு நடக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா பொறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்லவர் பவான் குமார் என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில் நகர போக்குவரத்து துறையில் ஊழல் நிறைந்து காணப்படுவதாக அவர் புகார் தெரிவித்திருந்தார். அதிவேக வாகனங்கள் மற்றும் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வழக்கு விசாரணையில் பரிசோதனை தேர்வை வீடியோவில் பதிவு செய்யும் ஆலோசனையை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘‘போலி ஓட்டுனர் உரிமங்களை தடுக்கும் வகையில் ஆதாருடன் ஓட்டுனர் உரிமத்தை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.