கோராக்பூர்:

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆக்ஸிஜன் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என கூறப்பட்டது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு இல்லாதது தான் காரணம் என்பது விசாரணையில்தெரியவந்தது. ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியில் புஷ்பா ஏஜென்சி நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

ஏற்கனவே அனுப்பிய ஆக்சிஜனுக்கு உரிய முறையில் பணம் தர மருத்துவமனை நிர்வாகம் லஞ்சம் கேட்டதால் சிலிண்டர்களை தொடர்ந்து அனுப்ப அந்த நிறுவனம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது. போலீசார் தேடி வந்த ஏஜென்சி உரிமையாளர் மணிஷ் பண்டாரி என்பரை டெயோரியா பகுதியில் கைது செய்தனர்.

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய விசாரணை குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.