போபால்:

ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைச்சர் அந்தஸ்திலான அரசு அமைப்பின் துணைத் தலைவர் பதவியில் இருந்தவர் ராஜேந்திர நம்தியோ. மத்திய பிரதேச ராஜ்ய சிலை கால மண்டல் அமைப்பின் துணைத் தலைவர் பதவியில் இருந்த அவரை பதவி நீக்கம் செய்து நகர நிர்வாக மற்றும் வீட்டு வசதி துறை துணைச் செயலாளர் ராஜிவ் நிகாம் உத்தரவிட்டுள்ளார். அதோடு பாஜக.வில் இருந்து 6 மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சாட் மாவட்டம் மைஹார் ஹனுமங்கஜ் போலீசார் நம்தியோ மீது பாலியல் துன்புறுத்தில் வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் அவர் மீது பாய்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 வயது பெண்ணை போபால் ரெயில்நிலையம் அருகே உள்ள ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

அந்த பெண் அவரிடம் இருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பெண் நம்தியோவிடம் ஒரு பணி தொடர்பாக அணுகியுள்ளார்.

எனினும் 3 மாதங்கள் கழித்து புகார் அளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது வரை நம்தியோ கைது செய்யப்படவில்லை. புகார் அளித்த பெண் மீது 2016ம் ஆண்டு போபாலில் ஆசிட் வீசப்பட்டது. ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர் தற்போது சிறையில் உள்ளார்.