புதுடெல்லி: இந்திய தலைநகரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் சில பா.ஜ. ஆதரவாளர்கள், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்திக்கச் சென்ற விவசாயிகளின் குழுவில் இடம்பெற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், அவர்கள் அந்த சட்டங்களில் திருத்தங்களைக் கோரியுள்ளனர். அந்தக் குழுவினரில் பலபேர், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை நடத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்புகளில் நூறு முதல் சில நூறு நபர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்தக் குறிப்பிட்ட குழுவினர் ஒரு குறிப்பாணையை வெளியிட்டுள்ளனர். அதில் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 3 சட்டங்களை ஆதரிக்கும் அதேசமயத்தில், விவசாயிகள் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மண்டி முறை ஆகியவை நீடிக்க வ‍ேண்டுமெனவும் அந்தக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் புஷ்பேந்தர் செளஹான். உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவர், மண்டி சிஸ்டம் தொடர வேண்டுமெனவும், மண்டிகளுக்கு வெளியேயும் உள்ளேயும் சமமான கட்டணங்கள் இருக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.