காரைக்குடி

மிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதிக்க விடக்கூடாது என ப சிதம்பரம் கூறி உள்ளார்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அவ்வகையில் காரைக்குடி தொகுதியில் உள்ள சாக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த மணக்குடி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கூட்டம் நடந்தது.  இதில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் கலந்து கொண்டார்.

ப சிதம்பரம் தனது உரையில், “காரைக்குடி தொகுதியில் அதிமுக தூக்குகிற பல்லக்கில் ஒருவர் (ஹெச்.ராஜா)பவனி வருகிறார். அந்த பல்லக்கை தூக்குகிறவர்கள் கையை விட்டுவிட்டால் பல்லக்கு கீழே விழுந்துவிடும்.  ஆனால் பல்லக்கைத் தூக்கக் கூட பாஜகவில் ஆள் கிடையாது. அத்தகைய பல்லக்கில் பவனி வரும் பாஜகவிற்கும், தமிழகத்திற்கும் என்ன தொடர்பு.

பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் எதுவும் பாடுபட்டதா? மாறாக ஆர்எஸ்எஸ் வெள்ளைக்காரர்கள் ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னது.   காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்குப் போன காலத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் யாரும் சிறைக்குப் போகவில்லை.

தமிழ் மொழி, கலாச்சாரம், இனத்திற்கு பாஜக பகை.  அக்கட்சியின்   முதல் ஆதாரக்கொள்கை இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதாகும்.  மொத்தத்தில் இந்தி தெரியாத அமைச்சர், அதிகாரி உடன் பேச முடியாது. பாஜகவின் 2-வது ஆதாரக் கொள்கை இந்தியா இந்து நாடு. மற்றவர்கள் 2-ம் தர குடிமக்கள்.  அதே வேளையில் அனைத்து மதத்தினருக்கும் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது. அனைத்து மதத்தினரும் சேர்ந்து வாழ்வது தான் இந்தியா என்பது காங்கிரஸ் கொள்கை

பாஜக வின் மூன்றாவது ஆதாரக் கொள்கை சனாதன தர்மம்.  அது தான் மீண்டும் இந்தியாவை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். தமிழக வரலாறு சனாதன தர்மத்தை எதிர்த்து வந்தது. கடந்த 100 ஆண்டுகளாகச் சனாதனத்தை ஒழிக்க 100 ஆண்டுகள் பெரியார், காமராஜர் போராடி உள்ளனர்.

தற்போது தமிழ் இனத்திற்கு ஒரு சவால் வந்துள்ளதால் மிகுந்த எச்சரிக்கையோடு வாக்களியுங்கள்.  உண்மையில் இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவிற்குத் தான் யுத்தம் என்றாலும் அந்த யுத்தத்திற்கு பிறகு மிகப்பெரிய நிழல் யுத்தம் இருக்கிறது.  பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதித்துவிடக் கூடாது.

100 நாள் வேலைத் திட்டத்தில் அரசு விதிப்படி சம்பளம் படிப்படியாக உயர்ந்திருக்க வேண்டும். தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊதியம் தர வேண்டும். ஆனால் ரூ.150 தான் தருகின்றனர். மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் அரசு ஆகும்.  எனவே தேர்தலில் பாஜக தோற்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.