பாட்னா :
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பா.ஜ.க. 121 இடங்களிலும் போட்டியிடும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, தேசிய அளவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும், பீகாரில் தனித்து போட்டியிடுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் லோக்ஜனசக்தி, பிரதமர் மோடியின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க. தலைவரும், பீகார் மாநில துணை முதல்- அமைச்சருமான சுஷில் மோடி’’ பீகார் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை, ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.கூட்டணி கட்சிகள் மட்டுமே பயன்படுத்தலாம். வேறு யாரும் மோடியின் போட்டா மற்றும் அவரது பேச்சுகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்’’ என்று கூறினார்.
-பா.பாரதி.