புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த  செல்வம் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று முடிந்த புதுச்சேரி  சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். ஆனால், அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளை கைப்பற்றுவதில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்தது.  இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு கட்சிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி,  பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகராக பாஜக சார்பில் எம்.எல்.ஏ.செல்வத்தை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.செல்வம், நேற்று  சபாநாயகர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,  அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் இன்று பதவியேற்றுக்கொண்டார். முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர்  சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரியில் பாஜகவை சார்ந்த எம்எல்ஏ ஒருவர் சபாநாயகராக பதவியேற்பது இதுவே முதல்முறை.