புதுச்சேரி:
புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்று அவரது மகன் ரிச்சர்ட்ஸ் நெல்லிதோப்பு தொகுதியில் பாஜகவில் நின்று வென்றார். இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவில்லை. இதனிடையே பாஜகவில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜான்குமாருக்கு பதிலாக மாற்று நபருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகத் தகவல் கசிந்தது. இதனை அறிந்த காமராஜ் நகர் தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (ஜூன் 19) புதுச்சேரி சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில பாஜக, ஜான்குமார் எம்எல்ஏவுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். திடீரென அலுவலகம் முன்பிருந்த பெயர்ப் பலகையைக் கிழித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து பாஜக-வினர் மீதி ரெட்டியார்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.