சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய நபரை அங்கு பந்தோபஸ்த்தில் இருந்த தமிழக காவல்துறையினர் நேற்று மடக்கிப் பிடித்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதனை அடுத்து பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவனது பெயர் கருக்கா வினோத் என்பதும் ஏற்கனவே தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கருக்கா வினோத் கடந்த சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார்.

இவரை ஜாமீனில் வெளியில் எடுத்தவர் யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், பாஜக வழக்கறிஞர் ஒருவர் இவரை பிணையில் எடுத்ததாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த நிலையில், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்பதும் இவர் பாஜக முக்கிய புள்ளியின் முன்னாள் ஓட்டுனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.