ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் நேற்று நடைபெற்ற பெட்ரோல் பாட்டில் வீச்சில் தொடர்புடைய கருக்கா வினோத் என்ற தொடர் குற்றவாளி சம்பவ இடத்திலேயே தமிழக காவல்துறையினரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், திடீரென சுதாரித்த ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தமிழக காவல்துறை தங்கள் தரப்பு புகாரை ஏற்காமல் அவர்களாக விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ள தமிழக டி.ஜி.பி., “ராஜபவன் மீது பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது ஒரு நபர் தான்.

அவரது பெயர் கருக்கா வினோத் அவர் தேனாம்பேட்டையில் இருந்து தனியாக வந்து ராஜபவனுக்கு எதிர்புறம் இருந்து பெட்ரோல் குண்டை வீச முற்பட்டுள்ளார்.

அதற்குள்ளாக சுதாரித்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவரைப் பிடிப்பதற்குள் மற்றொரு பாட்டிலையும் வீசினார்.

ஆனால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை, அந்த இரண்டு பாட்டில்களும் ராஜபவனுக்கு வெளியே சாலையில் இருந்த பேரிகேடில் பட்டு ரோட்டில் விழுந்தது.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை கைது செய்து நவம்பர் 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளோம்.

இதற்கான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.