திருச்சி:

மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்று இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்று திருச்சி வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“மின்னணு வாக்குப்பதிவு என்பது ஏமாற்றும் செயலாகும். நான் கள்ளக்குறிச்சி தொகுதியில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்டபோது, நான்தான் வெல்வேன் என்று ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால் நான் மிக மிகக் குறைந்த வாக்குகள்தான் பெற்றேன்.

அந்த தேர்தலின் போது கள்ளக்குறிச்சி தொகுதி முழுதும் சென்று வாக்கு சேகரித்தேன். எனது மகன் சிம்பு கிராமம் கிராமமாக  சென்று வாக்கு சேகரித்தார். கூட்டம் ததும்பியது. ஆனாலும் நான் மிகக் குறைவான வாக்குதான் பெற்றேன்.

இதற்குக் காரணம் எந்திர வாக்குப்பதிவுதான். எனக்கு வாக்களித்தால் வேறு யாருக்கோ வாக்கு சென்றது.

எந்திர வாக்குப்பதிவு என்பது தந்திர வாக்குப்பதிவு.

ஒரு சிப்பை வைத்து சீப்பான அரசியல் செய்கிறார்கள்.

முன்னேறிய நாடுகள்கூட இந்த எந்திர வாக்குப்பதிவை கைவிட்டுவிட்டன. இங்கு ஏன் தொடர வேண்டும்?

உ.பி. முதல் பல மாநிலங்களில் பா.ஜ.க. இதை வைத்துத்தான் வெற்றி பெறுகிறது. இது எங்கள் சந்தேகம்” என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.