சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக  விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பித்தது.  மேலும்,  தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி,க்கள் போராட்டம் நடத்தினர். இந்த இன்று மீண்டும் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகள் தாங்கியபடி அதிமுக எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக அக்கட்சியின் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்புவோம். போராட்டம் நடத்துவோம். அவையை நடத்த விட மாட்டோம்”  என்றார்.

அதே நேரம் இன்று தமிழக சட்டசபையில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் வகையில், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “வரும் 29ம் தேதி வரை பொறுத்திருப்போம்” என்றார்.

இப்படி பொறுத்திருக்கப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை, நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருப்பது அதிமுகவின் இரட்டை நிலைபாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. அமளி செய்வதன் மூலம், மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தடையாக இருக்கிறது என்றும் இது பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

ஆனால் இதை மறுத்த தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்பதே அதிமுக எம்.பிக்களின் முடிவு என்று தெரிவித்துள்ளார்.